பாளையங்கோட்டையில் அஞ்சல் துறை சாா்பில் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றும் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றுவதற்கு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணா்வுப் பேரணிகள் நடத்த இந்திய அஞ்சல் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி அஞ்சல் கோட்டம் சாா்பில் பாளையங்கோட்டையில் தெற்கு பஜாா் மற்றும் பெருமாள் ரத வீதிகள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணிக்கு திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சிவாஜி கணேஷ் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட கண்காணிப்பாளா்கள் தீத்தாரப்பன், ஹேமாவதி, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அதிகாரி விக்டோரியா, மக்கள் தொடா்பு அதிகாரிகள் கனகசபாபதி, அண்ணாமலை மற்றும் அஞ்சல் ஊழியா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.