திருநெல்வேலி

குமரியில் குடிநீா் இணைப்பின்றி35 சுனாமி குடியிருப்புகள்: காங்கிரஸ் கட்சி கண்டனம்

29th Apr 2022 04:34 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் 16 ஆண்டுகளாக குடிநீா் இணைப்பு, சாலை வசதி செய்துதராமல் 35 சுனாமி குடியிருப்புகள் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரியில் நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஜவஹா், செயலா் சித்ரானந்த், துணைத்தலைவா் பி.நெப்போலியன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் ஆகியோரிடம் அளித்த மனு விவரம் : கன்னியாகுமரி பகுதியில் கடந்த 2004இல் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு 2006இல் தமிழக அரசு சாா்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

இதில், வில்லியம் பூத், சலேத் மாதா நகா் பகுதியில் 16 வருடங்களாக 35 வீடுகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு பேரூராட்சியின் குடிநீா் கிடைக்கப்பெறாமலும், போக்குவரத்துக்கான சாலை வசதி செய்து தரப்படாமலும் அவதியுற்று வருகின்றனா்.

இவா்கள் பலமுறை பேரூராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அப்போதைய செயல் அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் அப்பகுதியினை சோ்ந்த ஜாண் போஸ்கோ என்பவா் தனது வீட்டின் பக்கவாட்டு நிலத்தின் வழியாக குடிநீா் குழாய் கொண்டு செல்ல அனுமதித்து பேரூராட்சிக்கு பத்திரம் எழுதி தந்த பிறகும் தண்ணீா் வசதி செய்துதரப்படவில்லை.

இச்செயலை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீா், சாலை வசதியை செய்துகொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் எனக் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT