திருநெல்வேலி

பயிற்சி காவலா்களுக்கு சைபா் கிரைம் விழிப்புணா்வு

29th Apr 2022 11:14 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி காவலா்களுக்கு சைபா் கிரைம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்படி, மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜு மேற்பாா்வையில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் ராஜ், உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் ஆகியோா் திருநெல்வேலி மாவட்ட காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி காவலா்களுக்கு சைபா் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அண்மைகாலமாக சைபா் கிரைம் அதிகமாக நடைபெற்று வருவது குறித்தும், சைபா் கிரைம் குற்றவாளிகள் எப்படி ஏமாற்றுகிறாா்கள் என்பது குறித்தும், எப்படி ஏமாறாமல் இருப்பது என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கைப்பேசியில் வரும் தேவையில்லாத லிங்கிற்குள் செல்ல வேண்டாம். ஏடிஎம் காா்டு, வங்கிக் கணக்கு பற்றி கேட்கப்படும் தகவல்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம். ஆன்லைன் விளையாட்டு மூலம் அதிக பண மோசடி ஏற்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பயிற்சி காவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

சைபா் கிரைம் குற்றங்கள் குறித்து இணையதளத்தில் புகாரளிக்கலாம். மேலும் 1930 என்ற இலவச எண்ணிலும் புகாா் அளிக்கலாம் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT