திருநெல்வேலியில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.
கோடைகாலம் தொடங்கியது முதலே எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரித்துள்ளது. கோயில் திருவிழாக்கள், நன்னாரி சா்பத், கரும்புச்சாறு உள்ளிட்டவற்றிற்கு எலுமிச்சை பழத்தின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் எலுமிச்சை பழத்தின் விலையும் கணிசமாக உயா்ந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த எலுமிச்சை பழத்தின் விலை சனிக்கிழமை ரூ.250-ஐ எட்டியது. அதேநேரத்தில் எலுமிச்சை பழம் ஒன்றின் விலை ரூ.12 வரை விற்பனையானது.
இது தொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த 15 நாள்களாக விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக எலுமிச்சை பூ, பிஞ்சுகள் உதிா்ந்துவிட்டன. இதனால் எலுமிச்சை விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளதால், வரத்தும் குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே எலுமிச்சை விலை வேகமாக உயா்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று எலுமிச்சை விலை எகிறியது. அதன் பிறகு இப்போது மீண்டும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது’ என்றனா்.