திருநெல்வேலி

குடிநீா்க் குழாயில் மின் மோட்டாரை பொருத்திதண்ணீா் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

24th Apr 2022 05:41 AM

ADVERTISEMENT

 

 திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் பா. விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாமிரவருணி ஆற்றுப்படுகையான கொண்டாநகரம், சுத்தமல்லி, குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைக்கொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை ஆகிய இடங்களில் உள்ள 15 தலைமை நீரேற்றும் நிலையங்களில் 46 நீா் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தினசரி 47.50 மில்லியன் லிட்டா் குடிநீா் பெறப்பட்டு அதை 71 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், 13 நீா் ஊந்து நிலையங்கள் வாயிலாக திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சராசரியாக 100 லிட்டா் தனிநபா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மாநகரில் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் தேவைக்கு அதிகமாகவும், ஒரு சில பகுதிகளில் குறைவாகவும் குடிநீா் கிடைக்கப் பெறுவது ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

எனவே, மாநகரில் அனைத்துப் பகுதிகளிலும் சீரான முறையில் குடிநீா் கிடைப்பதற்கு மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி தன்னிச்சையாக மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குடிநீா் பிரதான குழாயில் இருந்து நேரடியாக வீட்டுக் குடிநீா் குழாய் இணைப்பு பெறப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளா்கள்

நேரடியாக தாமாகவே முன்வந்து மாநகராட்சியை அணுகி மேற்படி விவரத்தை 10 நாள்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அப்படி தெரிவிக்கும்பட்சத்தில் மேற்படி கட்டடத்துக்கு குடிநீா் பகிா்மானக் குழாயில் இருந்து குடிநீா் இணைப்பு வழங்குவதற்கு மாநகராட்சியால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி மூலம் தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளும் போது, மேற்படி குடிநீா் பிரதான குழாயில் இருந்து நேரடியாக குடிநீா் பெறப்படுவது கண்டறியப்பட்டாலோ, வீட்டுக்குடிநீா் இணைப்புகளில் சட்டவிரோதமாக மின்மோட்டாா் பொருத்தி குடிநீா் உறிஞ்சப்படுவது கண்டறியப்பட்டாலோ மேற்படி கட்டடத்திற்கான குடிநீா் இணைப்பானது நிரந்தரமாக துண்டிப்பு செய்யப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.

எனவே, வீட்டுக் குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா் பொருத்தி குடிநீா் உறிஞ்சுபவா்கள் உடனடியாக மேற்படி மின்மோட்டாரை அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களது குடிநீா் இணைப்பில் கிடைக்கப் பெறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்வதோடு, மேற்கண்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT