திருநெல்வேலி

தாமிரவருணி தூய்மைப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடக்கிவைத்தார்

23rd Apr 2022 01:29 PM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம்: காரையாறு காணிக்குடியிருப்பிலிருந்து தாமிரவருணி கரையோரங்களில் 50 இடங்களில் தூய்மைப் பணிகளை சனிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடக்கிவைத்தார்.

பொருநை நெல்லைக்குப் பெருமை திட்டத்தின் கீழ் நெகிழி இல்லா நெல்லை, மீண்டும் மஞ்சள் பை இயக்கங்களை திருநெல்வேலி மாட்ட ஆட்சியர் வி.விஷ்ணு சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் தொடக்கிவைத்தார். 

இதையொட்டி சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி தாமிரவருணி தூய்மைப் பணிகளைத் தொடக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடைபெற்ற தூய்மைப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

சின்னமயிலாறு காணிக்குடியிருப்பில் நடைபெற்ற மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறும்போது, பொருநை நெல்லைக்குப் பெருமைத் திட்டத்தின் கீழ் தாமிரவருணி தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. குளிக்கும் தரத்தில் உள்ள தாமிரவருணியை குடிக்கும் தரமாக மாற்றும் நோக்கில் தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து நான்கு பகுதிகளாக பணிகளை மேற்கொள்கின்றனர். 

ADVERTISEMENT

தூய்மைப் பணிகளோடு அரசுத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஆற்றில் கழிவு நீர், மனிதக் கழிவு நேரடியாகக் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பிப்ரவரி முதல் நவம்பர் வரை ஒவ்வொரு ஆண்டும் தூய்மைப்பணி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். ஆற்றங்கரைகளில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 16 ஹெக்டர் விவசாய நிலம் மீட்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆற்றங்கரைகளில் 10 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், இல்லம் தேடி கல்வித்திட்டம் உள்ளிட்டவை தொடர்ந்து செயல்படுத்தப்படும். சமூகம் மற்றும் சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் செந்தில்குமார், சூழல் அலுவலர் அன்பு, சேரன்மகாதேவி துணை ஆட்சியர் சிந்து, வட்டாட்சியர் ஆனந்த் பிரகாஷ், நகராட்சி ஆணையர்கள் கண்மணி, பார்கவி, நகராட்சித் தலைவர்கள் செல்வசுரேஷ் பெருமாள், கே.கே.சி.பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT