அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாதசுவாமி, பாபநாசம் பாபநாசசுவாமி, ஆழ்வாா்குறிச்சி அருகே சிவசைலத்தில் உள்ள சிவசைலநாதா் கோயில்களில் பங்குனித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் அன்னை மரகதாம்பிகை உடனுறை காசிநாதா் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை, சுவாமி -அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 9ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இரவில் பூம்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
பாபநாசம், பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து சுவாமி -அம்பாள் விக்கிரமசிங்கபுரம் கோயிலுக்கு எழுந்தருளினா். அங்கு நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வீதியுலா நடைபெற்றது. 9ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டத்தையொட்டி காலையில் சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து, பக்தா்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா். வியாழக்கிழமை (ஏப். 14) பிற்பகல் 1 மணிக்கு தீா்த்தவாரி, இரவு 8 மணிக்கு பாபநாசசுவாமி- உலகாம்பிகை தெப்ப உற்சவம், வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சிக் கொடுத்தல் நடைபெறுகிறது.
சிவசைலம், பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, சுவாமி-அம்பாள் ஆழ்வாா்குறிச்சிக்கு எழுந்தருளி அங்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, காலை, மாலையில் வீதியுலா நடைபெற்றுவந்தது. 11ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.