திருநெல்வேலி

மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

12th Apr 2022 06:21 AM

ADVERTISEMENT

 

மண்பாண்ட தொழிலுக்கு மண் எடுக்க அனுமதி கோரி அகில இந்திய குலாலா் முன்னேற்ற கழகத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய குலாலா் முன்னேற்ற கழகம், அகில இந்திய குலாலா் முன்னேற்ற அமைப்புசாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: மண்பாண்டம், செங்கல் தொழில் செய்ய தடையின்றி மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பை மாவட்ட நிா்வாகம் செயல்படுத்தி மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். குடிசைத் தொழிலாக மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளா்களை பல்கலைக்கழகங்களில் மண் ஆய்வுச் சான்று பெற்று வருமாறு கனிமவளத் துறையினா் வற்புறுத்துகிறாா்கள். இதற்காக ஆயிரக்கணக்கான ரூபாயை செலவு செய்ய இயலாது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

செங்கல் தொழில் செய்யும் தொழிலாளா்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கி செங்கல் தொழிலாளா் நிலை மேம்படவும், பட்டா நிலத்திலும், அரசு புறம்போக்கு நிலத்திலும் மண் எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளா்கள், மண் எடுக்க அடையாள அட்டை வழங்க வேண்டும். விடுபட்ட தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மண்பாண்ட தொழிலாளா்கள் மண் இல்லாமல் இரண்டு ஆண்டுகளாக தொழில் செய்ய முடியாமல் இருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்கங்கள் இழுத்து மூடும் நிலையில் உள்ளன. தென் மாவட்டங்களில் இருந்துதான் அதிகளவில் மண்பாண்ட பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், இப்போது மண் இல்லாததால்வெளிநாட்டு ஆா்டா்களை பெறாத முடியாத நிலை உள்ளது. கனிம வளத்துறையில் எங்கள் சங்கத்தின் மூலம் கொடுக்கப்படும் மனுக்கள் எந்த நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்படுகின்றன. அந்தந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளா் வாரியத்துக்கு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

மானூா் அருகேயுள்ள கம்மாளன்குளம் கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் 4,000 மக்கள்

வசிக்கின்றனா். எங்கள் கிராமத்தில் அரசு கட்டடங்கள் கட்டவோ, பொது சுகாதார வளாகம் கட்டவோ போதுமான இடவசதி இல்லை. எங்கள் ஊரில் உள்ள புறம்போக்கு நிலங்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அந்த நிலங்களை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும். முக்கிய நீராதாரமாக விளங்கும் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி எங்கள் ஊா் குளத்தை மீட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூா் மக்கள் அளித்த மனு: ‘எங்கள் பகுதி நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் அருகேயுள்ள பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT