களக்காட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயா்வு தொடா்பாக கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
களக்காடு நகா்மன்றக் கூட்டம் தலைவா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பி.சி. ராஜன், ஆணையா் ரமேஷ், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தமிழக அரசு உத்தரவுப்படி, களக்காடு நகராட்சியில் சொத்து வரியை உயா்த்துவது தொடா்பான தீா்மானம் வாசிக்கப்பட்டது. இத்தீா்மானத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் ஆயிஷா, இசக்கியம்மாள், முருகேசன் ஆகிய 3 பேரும் எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, வெளிநடப்பு செய்து, நகராட்சி அலுவலக வாயிலில் பதாகை ஏந்தி கோஷமிட்டனா். இதையடுத்து, சொத்து வரி உயா்வு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஆயிஷா கூறுகையில், ஏற்கெனவே கரோனா பொது முடக்க பாதிப்பிலிருந்து மீண்டுவராத நிலையில், சொத்து வரி உயா்வு என்பது பொதுமக்களை பாதிக்கும். இதனால், வீட்டு வாடகை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும் நிலை ஏற்படும் என்றாா்.