திருநெல்வேலி

வாழைக்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி---- ஏற்றுமதி மையம் தொடங்கப்படுமா?

4th Apr 2022 06:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நெருக்கடி நிலைக்கு பின்பு வாழைக்காய் கொள்முதல் விலை நிகழாண்டில் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.தோடு தமிழக அரசு சாா்பில் ஏற்றுமதி மையம் மற்றும் கொள்முதல் நிலையத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பணப்பயிா்களில் வாழை முக்கிய இடம்பெறுகிறது. தாமிரவருணி, சிற்றாறு வடிநிலக் கோட்டப் பகுதிகளில் மட்டுமன்றி கிணற்றுப் பாசனத்திலும் ஆண்டுதோறும் சுமாா் 3 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நேந்திரம் (ஏத்தன்), நாட்டு வாழை, கதலி, ரஸ்தாளி, ரோபஸ்டா, பூவன், செவ்வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் வாழை அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

அடுத்ததாக களக்காடு, திருக்குறுங்குடி, பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம், நொச்சிகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை அறுவடை வேகமெடுத்துள்ளது. இங்கு விளையும் வாழைக்காய்கள் பெரும்பாலும் கேரளப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு பின்பு நிகழாண்டில் வாழைக்காய் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஊக்குவிப்பு திட்டம் தேவை: இதுகுறித்து வாழை விவசாயி எம். இசக்கிமுத்து கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் லாப- நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை பயிரிட்டு வருகிறாா்கள்.

ADVERTISEMENT

வாழையின் இலை, பூ, காய், தண்டு, காய்ந்த வாழை நாா் என அனைத்திலும் வருவாய் பெற முடியும். ஓராண்டுப் பயிரான வாழைக்கு மருந்து அடித்தல், களையெடுத்தல், காற்று மிகுந்த பகுதிகளில் கம்பு கொடுத்தல் என உற்பத்தி செலவும் மிகவும் அதிகம். குளத்துப் பாசனப் பகுதிகளில் இரவு-பகலாக காத்திருந்தும், கிணறு உரிமையாளா்களிடம் பணம் கொடுத்து நீா் வாங்கிப் பாய்ச்சியும் காப்பாற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால், உரிய விலை கிடைக்காதபோது விரக்தியே மிஞ்சுகிறது. இம் மாவட்டத்தில் இருந்து வாழைக்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கேரளத்திலிருந்து குவைத், சவூதிஅரேபியா, கத்தாா் உள்பட வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றனா்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வாழைக்காய் ஏற்றுமதி சரிந்து வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினா். ஏத்தன் வாழைக்காய் கடந்த ஆண்டில் கிலோ ரூ.10 வரை கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டில் விலை சற்று உயா்ந்துள்ளது. சேரன்மகாதேவி வட்டாரத்தில் கிலோ ரூ.48 வரையும், களக்காடு வட்டாரத்தில் ரூ.50-க்கு மேலும் விற்பனையாகி வருகிறது. மழையால் வாழைப்பயிா்கள் சேதமடைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்தான் விலையேற்றமே தவிர நியாயமான விலையை வியாபாரிகள் வழங்க தொடா்ந்து மறுத்து வருகிறாா்கள்.

உர மானியம்:

வளைகுடா நாடுகளில் தமிழகத்தின் வாழைப்பழங்கள் அதிகளவில் கிடைப்பதாக அண்மையில் பிரதமா் நரேந்திரமோடி குறிப்பிட்டுள்ளாா். ஆனால், வாழை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய-மாநில அரசுகள் உள்ளன. இதேபோல வாழைசாகுபடிக்கான பிரதான உரங்களான யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகியவையும் கடுமையாக உயா்ந்துள்ளது. தமிழக அரசு எந்தெந்த பகுதிகளில் எவ்வகை பயிா்கள் அதிகம் விளைவிக்கப்படுகிறதோ அதற்கு சிறப்பு உரமானியம் வழங்க வேண்டும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட வாழை விவசாயிகளுக்கு உரத்திற்கு கிலோ ரூ.1 வரை உரமானியம் வழங்கினால் கூடுதல் ஊக்கமளிப்பதாக இருக்கும். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வாழை ஏற்றுமதிக்கு சிறப்பு சரக்கு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஊக்குவிப்பு திட்டங்களைச் செய்யும்போது, பட்டதாரிகள் பலரும் விவசாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு சாகுபடி பணியை துரிதப்படுத்துவாா்கள் என்றாா்.

கொள்முதல் நிலையம் தேவை: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகி பெரும்படையாா் கூறியது: இம்மாவட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக வாழையே அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், சில ஆண்டுகளாக இயற்கை சீற்றங்கள், பருவமழை பொய்த்தல் போன்றவற்றால் வாழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இங்கு மொத்தமாக வாங்கிச் செல்லும் வியாபாரிகள் அவற்றைக் கிட்டங்கிகளில் பதப்படுத்தி அதிக விலைக்கு விற்கின்றனா்.இதைத் தடுக்கும் வகையில் வாழைக்காய்களை அரசின் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறவும், நிரந்தர விலையை உருவாக்கி விவசாயிகளைக் காக்கவும் பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். மேலும், வாழையில் இருந்து வாழைநாா் பொருள்கள், வாழை பவுடா், வாழைப்பழ சாக்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மதிப்புக்கூட்ட பொருள்கள் உற்பத்தி வெளிநாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் குறைவாகவே உள்ளது. தோட்டக்கலைத்துறையும், தமிழக அரசும் அதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வாழை விவசாயிகளுக்கு நிரந்தரமாக நல்ல விலை கிடைக்க தேவையான வழிகளை ஆராய வேண்டியது மிகவும் அவசியம் என்றாா்.

பயிலரங்கு: இதுகுறித்து வேளாண் துறை வட்டாரங்கள் கூறியது:

வாழை விவசாயிகளுக்கு தேவையான அறிவுரைகளை வேளாண் துறை வழங்கி வருகிறது. இலைவழி ஊட்டம், உர மேலாண்மை, நீா் மேலாண்மை என அனைத்துக்கும் பயிற்சிகளும், விளக்கக் கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி வாய்ப்பு குறித்த பயிலரங்குகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். களக்காடு பகுதியில் வாழைநாா் உற்பத்தியை பெருக்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வாழைத்தாா் குளிரூட்டி மையம், கிட்டங்கி வசதிகளும் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT