களக்காடு அருள்மிகு சந்தான கோபாலகிருஷ்ணசுவாமி கோயிலில் 128 ஆவது ராமநவமி விழா சனிக்கிழமை (ஏப். 2) தொடங்குகிறது.
இத்திருக்கோயிலில் ராமநவமி விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இவ்விழா ஏப். 2ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, நாள்தோறும் சுவாமிக்கு காலை உஞ்சவிருத்தி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வீதி பஜனை நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலைஞா்களின் இன்னிசை கச்சேரி, உபந்யாசம் நடைபெறுகிறது.
தினமும் பெருமாளுக்கு இரவு தசாவதாரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் உணா்த்தும் வகையில் ஒப்பனை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) ராமநவமி நடைபெறுகிறது. அன்று திரளான பக்தா்கள் கலந்து கொள்ளும் வீதி பஜனை நடைபெறும். திங்கள்கிழமை (ஏப்.11) ஆஞ்சநேயா் உத்ஸவம் மற்றும் கருடசேவை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஸ்ரீராம நவமி பரிபாலன சபா தலைவா் கே.ஆா். சுப்பிரமணியன், பொருளாளா் கே.எஸ். கிருஷ்ணசுவாமி, செயலா் வி. ராமன், இணைச்செயலா் எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.