பாளையங்கோட்டை, தெற்கு புறவழிச்சாலையில் கட்டட விதிமீறலுடன் செயல்படும் வணிக நிறுவனங்கள் உரிய வாகன நிறுத்த வசதியை ஏற்படுத்த தவறினால் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாளையங்கோட்டையில் திருவனந்தபுரம் சாலையில் ஒரு வணிக நிறுவனமும், தெற்கு புறவழிச்சாலையில் ஒரு வணிக நிறுவனமும் மாநகராட்சி அனுமதி பெறாமல் கட்டடம் கட்டப்பட்டதில் செயல்பட்டு வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிபட்டு வருகின்றனா். இது சம்பந்தமாக ஏற்கெனவே மாநகராட்சியால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்
விதிகளுக்கு முரணாகவும், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்காமலும் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா்கள். ஆகவே, மேலும் 3 நாள்களுக்குள் விதிகளின்படி மாற்றியமைக்காவிட்டால் மாநகராட்சியால் பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.