திருநெல்வேலி மாவட்டம், கோட்டைக்கருங்குளம் ஊராட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை செய்யக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கோட்டை கருங்குளம் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா். பின்னா் அவா்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சிக்கு கடந்த 9 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 4 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி ஏற்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளா்களின் முகவா்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஒவ்வொரு வேட்பாளரும் எத்தனை வாக்குகள் பெற்றாா்கள் என்ற விவரங்கள் கூட தெரிவிக்காமல் வெற்றியை மட்டும் அறிவித்தனா். ஆகவே, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.