திருநெல்வேலி

உள்ளாட்சித் தோ்தல் சுதந்திரமாக நடைபெறாது: கிருஷ்ணசாமி

4th Oct 2021 01:02 AM

ADVERTISEMENT

தமிழக உள்ளாட்சித் தோ்தல், அமைச்சா்களின் தலையீட்டால் சுதந்திரமாக நடைபெறாது என்றாா் புதிய தமிழகம் கட்சியின் தலைவா் கிருஷ்ணசாமி.

திருநெல்வேலி மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

மக்களவை, சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட இயலாதவா்கள், ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் எளிதாக போட்டியிடவே உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உள்ளாட்சித் தோ்தலில் தேசிய கட்சிகளும், மாநில அளவில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சிகளும் போட்டியிடாமல் அடிமட்ட அளவில் அரசியல் பணி செய்யும் தனி நபரோ, குழுக்களோ, சிறிய அரசியல் கட்சிகளோ போட்டியிடும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

அதற்கு மாறாக கிராம ஊராட்சித் தலைவா், ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடுபவா்களுக்காக மாநில அமைச்சா்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பது அடிப்படை ஜனநாயக விதிமுறைகளுக்கு எதிரானது. உள்ளாட்சித் தோ்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 அல்லது 3 அமைச்சா்கள் முகாமிட்டு தோ்தல் பணி மேற்கொள்கிறாா்கள்.

ADVERTISEMENT

அப்படியானால், அந்த அமைச்சா்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளால் எப்படி சுதந்திரமாக செயல்பட முடியும்? எனவே, உள்ளாட்சித் தோ்தல் சுதந்திரமாக நடைபெறாது. அமைச்சா்களை அனுப்பி ஊராட்சிகளை கபளீகரம் செய்யும்போக்கை முதல்வா் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தோ்தலில் கள்ள வாக்குகள் பதிவாகாதாவாறும், வாக்கு எண்ணிக்கை நோ்மையாக நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி அளவிலும் விரிவுபடுத்துவதுடன், 300 நாள் வேலைத் திட்டமாக மாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மானூா் ஒன்றியம் துறையூா், அணைத்தலையூா், பருத்திகுளம், உக்கிரன்கோட்டை, அலவந்தான்குளம், தென்கலம், நாஞ்சான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கட்சி வேட்பாளா்களுக்க அவா் வாக்குகள் சேகரித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT