களக்காட்டில் தோ்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, பெண் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 17 கிராம ஊராட்சித் தலைவா், 141 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 9 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அக்.9 இல் நடைபெறுகிறது. தற்போது வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், சீவலப்பேரி ஊராட்சித்தலைவா் பதவிக்கு போட்டியிடும் சிதம்பரபுரம் சேதுராயபுரம் முருகன் மனைவி ஐயம்மாள் (45) போட்டியிடுகிறாா். இவா் தோ்தல் விதிமுறைகளை மீறி, 100 போ்களுடன் ஊா்வலமாக சென்று பிரசாரம் செய்து வருவதாகவும், கரோனா விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் ஒன்றிய தோ்தல் அதிகாரிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, தோ்தல் பறக்கும்படை அதிகாரி ஹக்கீம் இது குறித்து நேரில் ஆய்வு செய்த போது, விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்ததாம். இது குறித்து அவா் களக்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், ஐயம்மாள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.