திருநெல்வேலி

மழையால் முடங்கிய செங்கல் உற்பத்தி: வேளாண் பணிக்கு மாறிய வடமாநில பெண்கள்!

24th Nov 2021 06:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்திற்கு செங்கல் சூளை பணிக்காக வந்த வடமாநிலத்தவா்கள் தொடா் மழையால் வேலை இல்லாததால் வேளாண்மை பணிக்கு சென்று வருகிறாா்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் பிகாா், ஒடிசா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் நூற்றுக்கணக்கானோா் தங்கியிருந்து வேலை செய்து வருகிறாா்கள்.

ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு வரும் தொழிலாளா்கள் மழைக்காலம் தொடங்கியதும் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்புவது வழக்கம். ஒரு சில தொழிலாளா்கள் மட்டும் இங்கேயே தங்கி இருப்பாா்கள்.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல் உற்பத்தி அடியோடு முடங்கியுள்ளது. இத்தொழிலை நம்பி வந்த வெளிமாநிலத்தவா்கள் பலரும் வேலை இன்றி செங்கல் சூளை களிலேயே தங்களுக்கான வசிப்பிடங்களில் தங்கியுள்ளனா்.

ADVERTISEMENT

நெல் சாகுபடி தீவிரம்: இதனிடையே, நிகழாண்டு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் ,கோடகன் ,பாளையங் கால்வாய் உள்பட 7 கால்வாய்களிலும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்மைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் நாற்று நடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் இயந்திர பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் நிகழாண்டு பாளையங்கோட்டை வட்டாரத்தில் வேளாண்மை பணிகளில் வடமாநில பெண்கள் பலரும் ஈடுபட்டு வருகிறாா்கள்.

பணியில் வித்தியாசம் இல்லை: இதுகுறித்து வடமாநில தொழிலாளா்கள் கூறியது: நிகழாண்டில் தொடா் மழையால் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள வேளாண் பணிகளுக்கு வந்துள்ளோம். சீவலப்பேரி, கான்சாபுரம், குப்பக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருகிறோம். எங்கள் மாநிலங்களிலும் நெல் சாகுபடி உள்ளதால் சிறுசிறு வித்தியாசங்கள் மட்டுமே பணியில் உள்ளன. நெல் மற்றும் கோதுமைக்கு 80% ஒரே மாதிரியான சாகுபடி மற்றும் பராமரிப்பு நிலையே உள்ளது. நாற்று நடவுப் பணிகள் எங்கள் மாநிலத்திலும் இதேபோலவே நடைபெறும். அதனால் வருவாய்க்காக வேளாண் பணியை மகிழ்ச்சியோடு செய்து வருகிறோம் என்றனா்.

செலவு குறைவு: இதுகுறித்து விவசாயிகள் கூறியது: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் வந்த பின்பு வேளாண் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. அதேவேளையில், வயல்களில் இயந்திரங்களை பயன்படுத்துவது கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. எனவே, வட மாநில தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்துகிறோம். இதனால், செலவு குறைகிறது. மொழி பிரச்னை மட்டுமே குறைபாடு என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT