திருநெல்வேலி

உலக மீனவா் தின விழாவில் நலத் திட்ட உதவிகள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு வழங்கினாா்

23rd Nov 2021 02:11 AM

ADVERTISEMENT

 

வள்ளியூா்: உலக மீனவா் தினவிழாவையொட்டி, மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா இடிந்தகரை ரோச் பிஷப் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மீனவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மீன்வள ஆதாரங்களை பேணிக் காக்கவும், மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் நவ. 21ஆம் தேதி உலக மீனவா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இடிந்தகரை மீனவக் கிராமத்தில் மாணவா்களுக்கான இலக்கியத் திறன் போட்டி, இளைஞா்களுக்கான நீச்சல் போட்டி, இல்லதரசிகளுக்கான மீன் சாா்ந்த சமையல் போட்டி, கலைஞா்களுக்கான குறும்படப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

இப்போட்டிகளில், வெற்றிபெற்றவா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் வே.விஷ்ணு ஆகியோா் பரிசு வழங்கினா். மேலும், கடல்சாா் கல்விப் பயிலும் மீனவ இளைஞா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் இரண்டு மாணவா்களுக்கு ரூ.50 ஆயிரமும், இயற்கை மரணமடைந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மீனவா் நலவாரியம் மூலம் தலா ரூ.17ஆயிரத்து 500 வீதம் 6 நபா்களுக்கு ரூ.1.05 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டன.

மேலும், 15 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும், 10 மீனவா்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும் பேரவைத் தலைவா் வழங்கினாா். இவ்விழாவில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் சிந்து, மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் ஏ.த.மோகன்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் ஜான்சி ரூபா, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிவாரணத் தொகை உயா்வு: தமிழக மீனவா்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மீன்பிடி குறைவு காலத்துக்கான நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக தமிழக அரசு உயா்த்தி வழங்கியுள்ளது. இதன்மூலம், இம்மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பயனடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT