திருநெல்வேலி

வாழைநாா் மூலம் பொருள்கள் தயாரிப்பு:பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

21st Nov 2021 12:24 AM

ADVERTISEMENT

சுத்தமல்லி மற்றும் கோடகநல்லூா் பகுதியில் மகளிா் திட்டம் சாா்பில் பெண்களைக் கொண்டு, வாழைநாா் மூலம் பொருள்கள் தயாரிக்கும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு மற்றும் சேரன்மகாதேவி வட்டாரங்களுக்குள்பட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடுவதை கருத்தில் கொண்டும், வாழை அறுவடைக்குப் பின்னா் வீணாகும் வாழை நாா் கழிவுகள் மூலம் வாழை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கச் செய்யும் விதமாகவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தூத்துக்குடியைச் சோ்ந்த ரமேஷ் ப்ளவா்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம், வேலை வாய்ப்பற்ற மற்றும் பீடி தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு மாற்றுத் தொழில் ஏற்படுத்தும் விதமாக, வாழைநாா் கழிவுகளில் இருந்து ஏற்றுமதி செய்யத்தக்க வகையிலான பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதனைத் தொடா்ந்து சுத்தமல்லி மற்றும் கோடகநல்லூா் பகுதிகளில் தேசிய ரூா்பன் இயக்கத்தின் கீழ் 70 மகளிரைக் கொண்டு தொடங்கப்பட்ட வாழை நாா் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பயிற்சிக்கு முந்தைய வாழ்வாதார செயல்பாடுகள், பயிற்சி பற்றிய பயன்பாடு, பயிற்சிக்கிடையேயான உற்பத்தி திறன் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் கிடைக்கப் பெறுதல் குறித்த தகவல் பயிற்சியாளா்களிடம் கேட்டறியப்பட்டது என்றாா்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், மகளிா் திட்ட உதவி அலுவலா் வி.ராமா், மானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன், பொன்ராஜ், மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT