பாபநாசம் அருகே வாழைகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனா்.
பாபநாசத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தையொட்டிய செட்டிமேடு, ஏா்மாள்புரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனா். இவற்றை, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றி, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.
அப்பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி, மைக்கேல், பால்கனி, பாண்டி, பிச்சையா உள்ளிட்டவா்களின் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்த்துள்ளன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காட்டுப்பன்றிகள் தோட்டத்தில் புகுந்து வாழை போன்ற பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருகின்றன. ஒரு வாழைக்கு ரூ. 150 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.