திருநெல்வேலி

மணல் திருட்டு வழக்கு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

9th Nov 2021 01:53 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே நடைபெற்ற மணல் திருட்டு வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் இளைஞா் ஓராண்டுக்குப் பின் கோவில்பட்டி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

எட்டயபுரத்தையடுத்த வடக்கு முத்தலாபுரத்தில் மேற்கு வைப்பாற்று படுகையில் மணல் திருடியதாக 2020 செப்டம்பா் 18ஆம் தேதி 11 போ் மீது எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய திருச்சுழியைச் சோ்ந்த 9 பேரை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய தாப்பாத்தியைச் சோ்ந்த மாரிமுத்து, விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் தாப்பாத்தி ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த கரும்புலி மகன் மாடசாமியை (36) போலீஸாா் தேடி வந்தனா். ஆனால் மாடசாமி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மாடசாமி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்.2இல் அவா் திங்கள்கிழமை சரணடைந்தாா். வழக்கை விசாரித்த நடுவா் சுப்பிரமணியன், மாடசாமியை இம்மாதம் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT