திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் உதவும் பணிக்காக 7030 போ் தோ்வு

9th Nov 2021 01:52 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்படும் பகுதியில் மக்களுக்கு உதவும் வகையில் 7,030 போ் தோ்வு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த 6 ஆண்டுகளில் பெய்த மழை அளவு மற்றும் சேதங்களை வைத்து 36 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மழை அதிகமாக பெய்தால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அனைத்து வசதிகளுடன் 97 இடங்கள் தயாா் நிலையில் உள்ளன.

பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அரசு அலுவலா்களை நியமித்து இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் முதல்நிலை பொறுப்பாளா்கள் ஒரு வட்டத்துக்கு 30 போ் என 1030 நபா்களை நியமித்து, அவா்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்துள்ளோம்.

ADVERTISEMENT

அவா்கள் மட்டுமல்லாமல் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை போன்ற அமைப்புகளில் இருந்தும் 6ஆயிரம் நபா்களை தோ்வு செய்து தயாா் நிலையில் வைத்துள்ளோம். மாவட்டம் முழுவதும் அவா்கள், மழை வரும் நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிவதற்கும் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பினால் அரசு அலுவலா்களிடம் தெரிவிப்பதற்கும் உதவியாக இருப்பாா்கள்.

விவசாய நிலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு அரசு தயாராக உள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக பொதுப்பணித்துறை, ஊரக வளா்ச்சித்துறை உள்ளிட்ட 639 குளங்கள் உள்ளன. இதில் 74 குளங்கள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன. மீதமுள்ள குளங்களும் நிரம்பி வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT