திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு

2nd Nov 2021 01:05 PM

ADVERTISEMENT


திருநெல்வேலி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை  ஆடுகள் விற்பனை அதிகரித்தது. சுமார் ரூ.1.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலப்பாளையம் சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இங்கு தமிழகத்திலிருந்து மட்டுமன்றி, ஆந்திரம், கேரளத்தில் இருந்தும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நல்ல விலை கிடைக்கும் என ஆடு வளர்ப்பவர்களும், வியாபாரிகளும் கடந்த இரு வாரங்களாக ஆடுகளை சந்தைக்கு கொண்டு வருவது அதிகரித்தது. கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்த நிலையிலும், செவ்வாய்க்கிழமை காலை முதலே மேலப்பாளையம் கால்நடை  சந்தை களைகட்டத் தொடங்கியது. 

வெள்ளாடுகள், செம்மறியாடுகளை வாங்குவதற்காக உள்ளூர் வியாபாரிகள் மட்டுமன்றி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர்,  நாகர்கோவில் மாவட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இறைச்சிக் கடைக்காரர்களும் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கினர். 

ADVERTISEMENT

இது தொடர்பாக வியாபாரி ஒருவர் கூறியது: தீபாவளி பண்டிகைக்கு இறைச்சி சாப்பிடும் வழக்கம் தமிழகத்தில் நீண்ட நாள்களாக உள்ளது. நிகழாண்டில் மகாவீரர் ஜெயந்தியும் சேர்ந்து வந்ததால் முதலில் இறைச்சிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நகர்ப்பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடை வியாபாரிகள் கடந்த வாரம் சிறிது தயக்கம் காட்டினர். ஆனால், தமிழக அரசு தளர்வுகள் அளித்து இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளதால் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இறைச்சி வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கால்நடைச் சந்தைக்கு வந்திருந்தனர். 
ஆடுகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை விலை போனது. மேலப்பாளையம் கால்நடைச்சந்தையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை சுமார் ரூ.1.5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றிருக்கும் என்றார்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், மழைக்காலத்தில் கால்நடை சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை. சந்தை முழுவதும் சேறும் சகதியுமாகஇருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்படவில்லை. உணவு கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை சந்தையின் நுழைவுக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்னுரிமை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

மேலப்பாளையம் கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை குவிந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள்.
 

Tags : diwali market
ADVERTISEMENT
ADVERTISEMENT