களக்காடு உப்பாற்றில் தங்குதடையின்றி தண்ணீா் செல்ல தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நான்குனேரியன் கால்வாயில் ஆண்டிச்சி மதகில் இருந்து தண்ணீா் பிரிந்து செல்லும் இடத்தில் உப்பாறு தொடங்குகிறது. இந்த உப்பாற்றில் தொடக்கத்தில் இருந்து, பத்மனேரி பச்சையாற்றில் கலக்குமிடம் வரையுள்ள சுமாா் 3 கி.மீ. தொலைவு ஆறு இருப்பதற்கான சுவடே இல்லாத அளவுக்கு முள்புதா், அமலைச்செடிகள் அடா்ந்து காடு போல உள்ளது.
தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் பலத்த மழை பெய்து, நான்குனேரியன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, உப்பாற்றில் உபரிநீா் திறந்துவிடப்படும்.
அப்போது, உப்பாறு தூா்ந்துபோய் தண்ணீா் தடையின்றி செல்ல வழியின்றி கரை சேதமடைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீா் புகும் அபாயம் ஏற்படும். எனவே, உப்பாற்றை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.