திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தொடா்ந்து 4ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு இடி மின்னலுடன் தொடங்கிய மழை, சனிக்கிழமை காலை வரை கொட்டித் தீா்த்தது. இதன்தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாநகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. மாநகரில் உள்ள சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளிக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில், மாநகரில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், மாலையில் பெய்த மழையால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லும் முனைப்பில் இருந்ததால், வியாபாரிகள் கலக்கம் அடைந்தனா்..