திருநெல்வேலி

மாஞ்சோலை மலைச்சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

13th Jan 2021 08:18 PM

ADVERTISEMENT

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாஞ்சோலை மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் யானைப்பாலத்தை மூடியபடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதையடுத்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு மற்றும்  தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமநதி அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக 30 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதையடுத்து தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரங்களில் உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கின.

ADVERTISEMENT

மலைச்சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை அப்புறப்படுத்தும் தோட்டத் தொழிலாளர்கள்.

வெள்ளப்பெருக்கு காரணமாக அம்பாசமுத்திரம் அருகே ஆலடியூர், பாப்பாக்குடி பகுதிகளில் தாழ்வானபகுதியில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டப் பகுதிகளில் தொடர்ந்து ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) தோட்டத் தொழிலாளர்கள் அதிக மழை காரணமாக தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவில்லை. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாஞ்சோலைக்கு எவ்வித  வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) பொங்கல் திருவிழா கொண்டாடும் நிலையில் தொழிலாளர்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்கள்  வாங்கிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து உடனடியாக மண்சரிவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் இரண்டாவது நாளாக பாபநாசம் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து பாபநாசம் அணை பாலம் மூழ்கிய நிலையில் வெள்ளப்பெருக்கு செல்கிறது. இதனால் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பாபநாசம் கோவில், காரையாறு, சேர்வலாறு மற்றும் பொதிகையடி பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tirunelveli
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT