திருநெல்வேலி

கல்வி, மருத்துவம் வியாபாரப் பொருளாக இருக்கக்கூடாது: ராகுல் காந்தி

DIN

கல்வி, மருத்துவம் வியாபாரப் பொருளாக இருக்கக்கூடாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு, பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:  அரசியலில் இருந்து மதம் நீக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து மதத்தினருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுமே ஒருவர் மற்றொருவருக்கு மரியாதை அளியுங்கள், ஒருவர் மற்றவரை நேசியுங்கள் என்றுதான் சொல்கின்றன.

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் சமூகம் வளர்ச்சியடைகிறது. கல்வி அனைவருக்கும் பொதுவானது. நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வருகிறபோது, ஏழ்மையை பின்னணியாக கொண்ட மாணவர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் கல்வியை உறுதி செய்வோம். கல்வி, விவசாயம், மருத்துவம் ஆகியவற்றை மத்திய அரசு வியாபார பொருளாக பார்க்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில், பணமின்றி எதுவும் கிடைக்காது என்ற நிலை உள்ளது. கல்வி, மருத்துவம் போன்றவற்றை வியாபாரப் பொருளாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது ஏழை மக்களுக்கு கிடைக்காது.

கல்வி, மருத்துவத்தில் தனியார் துறையை அனுமதிக்கலாம். ஆனால், அது பெரும்பாலானவர்களுக்கு இலவசமாகவும், உயர்தரமானதாகவும், எளிதாகவும் கிடைக்க வேண்டும். நாம் தற்போது பணபலம் கொண்ட மற்றும் எதிராளிகளை நசுக்கக்கூடிய வல்லமை மிக்க எதிரிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னரும் இதே போன்று போராடியிருக்கிறோம். 70 ஆண்டுகளுக்கு முன்பு நரேந்திர மோடியைவிட சக்திவாய்ந்த பிரிட்டிஷ் அரசை வீழ்த்தியிருக்கிறோம். நாட்டு மக்கள் பிரிட்டிஷ் அரசை நாட்டுக்கு திருப்பியனுப்பியதைப்போல நரேந்திர மோடியை மீண்டும் நாகபுரிக்கு அனுப்ப வேண்டும்.

வன்முறையின்றி, கோபத்தை வெளிப்படுத்தாமல் மோடியை திருப்பியனுப்ப வேண்டும். அவர்கள் நம்மை திட்டலாம், தாக்கலாம். ஆனால், அவர்களைப் போல் நாம் எதுவும் செய்யக்கூடாது என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தூய சவேரியார் கலைமனைகளின் அதிபர் ஹென்றி ஜெரோம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT