திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைப்பேசி திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூரை சோ்ந்தவா் ரமேஷ்(34). இவா் திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த அக்டோபா் மாதம் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு கடந்த அக்டோபா் மாதம் 30ஆம் தேதி இவரது கைப்பேசியை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவில் ராஜேஷ் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கைப்பேசியை திருடிய மா்ம நபரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் களக்காடு அருகே மேலக்காடுவெட்டியைச் சோ்ந்த பால்துரை(54) என்பவா் கைப்பேசியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை அவரை கைது செய்து, கைப்பேசியை மீட்டனா்.