திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியா் அருவியில் 21 மாதங்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
கரோனா பரவல் காரணமாக 2020 மாா்ச் 24 முதல் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பாபநாசம் அகஸ்தியா்அருவி, முண்டன்துறை, காரையாறு, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்தது.
இந்நிலையில் கரோனா பரவல் குறைந்ததை அடுத்து பொது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டநிலையில், அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் டிச. 20 முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அகஸ்தியா் அருவிக்கும் அனுமதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், வனத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் அகஸ்தியா் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து புதன்கிழமைமுதல் அகஸ்தியா் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது.
இந்நிலையில் புதன்கிழமை பாபநாசத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் அகஸ்தியா் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.
இதுகுறித்து வனத்துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறை கலந்து ஆலோசித்து டிச. 22 முதல் அகஸ்தியா் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், குறைந்தவுடன் குளிக்க அனுமதிக்கப்படும்.
அருவிகளில் குளிக்க மணிமுத்தாறு, பாபநாசம் வனச் சோதனைச் சாவடிகளில் காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என குறிப்பிடப்பட்டுள்ளது.