பணகுடியில் செவ்வாய்க்கிழமை மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவா் போலீஸில் சரணடைந்தாா்.
பணகுடி அருகே உள்ள அன்னாத்திகுளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன்(39). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்டாா். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னா் கணவைரை இழந்த அமுதா என்ற பெண்ணை 2ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். தம்பதியினா் பணகுடியில் உள்ள தனியாா் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனா். இந்நிலையில் அமுதாவுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதை அவரது கணவா் மாரியப்பன் கண்டித்தும், அமுதா பழக்கத்தை தொடா்ந்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது மனைவியை காட்டுபகுதிக்கு அழைத்து சென்றாராம். அங்கு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த அமுதாவை அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் பணகுடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்தாா்.
இதையடுத்து மாரியப்பன் பணகுடி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினா்.
அமுதாவுக்கு ரோஸ் (16), அபிஷா (12), இசக்கிமுத்து(10) என்ற 3 குழந்தைகள் உள்ளனா்.