திருநெல்வேலி

நெல்லையில் சூரியகாந்தியின் லாபத்தை அபகரிக்கும் பச்சைக்கிளிகள்! ஒலி எழுப்பி காப்பாற்றும் விவசாயிகள் 

2nd Aug 2021 11:21 AM | கோ.முத்துக்குமார்

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள மானூர் சுற்று வட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள சூரியகாந்தி பூக்களை பச்சைக் கிளிகள் கூட்டமாக வந்து கொத்தி சேதப்படுத்தி லாபத்தை அபகரித்து வருகின்றன. இதனால் காலை முதல் இரவு வரை தகர டப்பாக்களால் ஒலி எழுப்பி சூரியகாந்தியை விவசாயிகள் காப்பாற்றி வருகிறார்கள். 

தமிழகத்தில் பணப் பயிர்களான எண்ணெய் வித்துகளைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆமணக்கு, எள், சூரியகாந்தி ஆகியவை பயிரிடப்படுகின்றன. மானூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் வட்டாரங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. மானூர் வட்டாரத்தில் கீழபிள்ளையார்குளம், தெற்கு செழியநல்லூர், வடக்கு செழியநல்லூர், தென்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் சூரியகாந்தியை அதிக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 

அவர்களுக்கு பச்சைக் கிளிகளால் தொல்லை தொடர்ந்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். மானூர் சுற்றுவட்டாரத்தில் நெல், சோளம், கம்பு, த்தரி, வெண்டை, பருத்தி ஆகியவை மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. சிற்றாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள இப் பகுதியில் பாசனக் கிணறுகளில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் கிடைக்கும். அதன்மூலம் தோட்டப் பயிர்கள் சிறப்பாக இருந்தன. வருவாயைக் கருத்தில்கொண்டு சிலர் மலர் சாகுபடிக்கு மாறினார்கள். கேந்தி, கோழிக்கொண்டை, பிச்சி, மல்லித் தோட்டங்கள் இப்போது அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புதிய முயற்சியாக சூரியகாந்தி, எள் போன்ற எண்ணெய்வித்து பயிர்களுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர். 

ADVERTISEMENT

சூரியகாந்தியை பொருத்தவரை மானாவாரியாக ஆடி, கார்த்திகை பட்டத்திலும், இறவையில் மார்கழி, சித்திரைப் பட்டத்திலும் பயிரிடப்படுகிறது. நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கும். மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 7 கிலோவும், இறவை நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோ விதையும் தேவைப்படுகிறது. செடிகள் ஊன்றப்பட்டு அதிகபட்சம் 45 முதல் 60 நாள்களுக்குள் பூக்கள் பூக்கத் தொடங்கிவிடுகிறது. லாபத்தை அபகரிக்கும் கிளிகள்: இதுகுறித்து செழியநல்லூரைச் சேர்ந்த விவசாய தொழிலாளி கூறுகையில், சூரியகாந்தியில் கோ.4, மார்டன், கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44 உள்பட 8-க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. 

சூரியகாந்தி சாகுபடியில் கம்பளிப்பூச்சி, இலைத்தத்து பூச்சி, புகையிலைப்புழு, துரு நோய் உள்ளிட்டவை சவாலாக உள்ளன. இருப்பினும் அதைஎதிர்கொண்டு கடந்த 4 ஆண்டுகளாக சூரியகாந்தி பயிரிட்டு வருகிறோம். செழியநல்லூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி பயிர்களுக்கு கிளிகளால் பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு பின்பு 50-க்கும் மேற்பட்ட கிளிகள் வந்து மலர்ச்சியோடு இருக்கும் பூக்களின் விதைகளை சாப்பிடுகின்றன. விதைகளே எண்ணெய்க்கு ஆதாரமாகும். பூக்களில் விதைத் திரட்சி இல்லையெனில் அதிக விலைக்கு விற்பனையாகாது. ஆகவே, கிளிகளிடம் இருந்து சூரியகாந்தி பயிர்களைக் காப்பாற்ற மிகவும் சிரமமாக உள்ளது. 

இதையும் படிக்கலாமே| துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு நாகை ஆட்சியர் ஆறுதல் 

தினமும் 4 விவசாயத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி மாலை முதல் இரவு 7 மணி வரை டமாரம் கொண்டும், பட்டாசுகளை வெடித்தும் ஒலி எழுப்பி கிளிகளை விரட்டி வருகிறோம். சிறிது நேரம் கண் அசந்தாலும் கிளிகள் வந்து விதைகளைச் சாப்பிடத் தொடங்கி விடுகின்றன. அறுவடை காலத்தில் சூரியகாந்தியால் கிடைக்கும் லாபத்தை பச்சைக்கிளிகள் அபகரித்துச் செல்வது கவலையை ஏற்படுத்துகிறது என்றனர். இதுகுறித்து செழியநல்லூரைச் சேர்ந்த சூரியகாந்தி சாகுபடி விவசாயி சங்கர் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியகாந்தி சாகுபடி செய்து வருகிறேன். 60 நாளில் சூரியகாந்தி பூக்கள் திரட்சியாக இருக்கும். அப்போது கிளிகள் வந்து சேதப்படுத்த தொடங்கிவிடுகின்றன. 

இதுகுறித்து வேளாண் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் கிளிகளை விரட்டும் யுக்திகளை தெரிவிக்கவில்லை. இதுதவிர மான்கள், பன்றிகளாலும் செழியநல்லூர் பகுதியில் பயிர்கள் சேதமாகி வருகின்றன. இவற்றை தடுக்க வேளாண் துறையினரும், வனத்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

Tags : nellai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT