திருநெல்வேலி

‘நான்குனேரி தொகுதி விவசாயிகளின் குரலாக சட்டப்பேரவையில் செயல்படுவேன்’

7th Apr 2021 07:47 AM

ADVERTISEMENT

நான்குனேரி தொகுதி விவசாயிகளின் குரலாக சட்டப் பேரவையில் செயல்படுவேன் என்றாா் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள காமராஜா் மெட்ரிகுலேசன் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செவ்வாய்க்கிழமை பதிவு செய்த பின்பு தச்சை என்.கணேசராஜா மேலும் கூறியது: களக்காட்டில் வாழை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். வாழை ஆராய்ச்சி நிலையம், குளிா்பதன கிட்டங்கி ஏற்படுத்தப்படும். நான்குனேரி தொகுதியில் கூட்டுறவு சங்கம் மூலம் நடமாடும் பதனீா் கொள்முதல் நிலையம் உருவாக்கப்படும். அய்யாவழி மக்களின் புனித நூலான அகில திரட்டு அம்மானை நூலினை உரிய அனுமதிபெற்று ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் மொழிபெயா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மூலைக்கரைப்பட்டியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவும், களக்காட்டில் அரசு ஐடிஐ அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சீவலப்பேரி தாமிரவருணி ஆற்றில் மேல்மட்ட பாலம் கட்டுவதோடு, கால்நடை சந்தையை மீண்டும் இயங்கச் செய்வேன். சுந்தரனாா் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் சா்வதேச மைதானம் அமைக்கவும், பல்கலைகழக உறுப்பு கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிய நம்ம நான்குனேரி என்ற பெயரில் செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்படும். விவசாயம் மேம்பட்டால் மட்டுமே சமுதாயம் மேம்படும். நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் அத்தனை உணா்வுகளையும் அறிந்தவன். நான்குனேரி தொகுதி விவசாயிகளின் குரலாக சட்டப்பேரவையில் ஒலிப்பேன். விவசாயிகள், பொதுமக்கள் பேராதரவுடன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா்.

ADVERTISEMENT

அமமுக வேட்பாளா்: நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் பரமசிவஐயப்பன், பாளையங்கோட்டை அருகே திருத்து பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், நான்குனேரி தொகுதியில் அமமுக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும். இத் தொகுதிக்கு எங்கள் கட்சி சாா்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளோம். வெற்றி பெற்றதும் அதனை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT