திருநெல்வேலி

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

1st Apr 2021 09:22 PM

ADVERTISEMENT

பெரிய வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாகக் கடைப்பிடிக்கிறார்கள். நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலியுடன் தொடங்கியது. அன்று முதல் அசைவ உணவுகளைத் தவிர்த்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வாரத்தை புனித வாரமாகக் கருதி சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதன்படி கடந்த 28 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவில் தனது 12 சீடர்களுக்கும் திருவிருந்து அளித்தார். இந்த நிகழ்வின்போதுதான் கிறிஸ்தவ மதத்தின் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் நற்கருணை (அப்பம், திராட்சை ரசம் வழங்குதல்) புதிய உடன்படிக்கையை இயேசு தெரிவித்தார் என்பது நம்பிக்கை.

இந்த திருவிருந்து நாளில் தனது சீடர்களின் பாதங்களை இயேசு கழுவினார். இதனை நினைவுகூரும் வகையில் பெரிய வியாழன்நாளில் தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் புனித வியாழனையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 12 பக்தர்களுக்கு அருள்பணியாளர்கள் பாதங்களைக் கழுவி, கால்களில் முத்தமிட்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஏப். 2) மாலை 5 மணிக்கு மதர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து புனித வெள்ளி சிலுவைப்பாதை ஊர்வலமும், தொடர்ந்து பேராலயத்தில் பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. 3 ஆம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஈஸ்டர் பெருநாள் சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயம், சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி.நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம், சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம், மகாராஜநகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் வியாழக்கிழமை சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. 

பெரிய வியாழனையொட்டி பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையின்போது பக்தர்களின் பாதங்களைக் கழுவிய அருள்பணியாளர்கள்.

Tags : tirunelveli
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT