திருநெல்வேலி

கொண்டாநகரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணி டிசம்பருக்குள் நிறைவடையும்: அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி

DIN

தென்காசி, விருதுநகா் மாவட்டங்களில் உள்ள சில பேரூராட்சி, நகராட்சிகளுக்கு தாமிரவருணி குடிநீா் வழங்கும் கொண்டாநகரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் என ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தெரிவித்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கொண்டாநகரத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை அமைச்சா் ராஜலெட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி மற்றும் விருதுநகா் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ. ரூ.543.20 கோடியில் நடைபெறுகிறது. இதில், தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள் மற்றும் திருவேங்கடம் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் மதிப்பீட்டுத் தொகை ரூ.302.86 கோடியாகும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அதிகபட்ச மக்கள்தொகை 2047-ஆம் ஆண்டின்படி 6.21 லட்சம் ஆகும். இக்கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் நீராதாரமாக கொண்டாநகரம் அருகே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே பொதுப்பணித் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைக்கு முன்பாக நீா் எடுக்கும் கிணறு மூலம் 61.98 மில்லியன் லிட்டா் நீரை எடுத்து குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீரேற்றம் செய்யப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் 23.20 லட்சம் லிட்டா் மற்றும் 2.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிகளில் பெறப்பட்டு மானூரில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீா் உந்து நிலையத்துக்குச் சென்றடையும். அங்கிருந்து பனவடலிசத்திரத்தில் அமைக்கவுள்ள இரண்டாவது நீா் உந்தும் நிலையத்துக்கும், சங்கரன்கோவிலில் அமைக்கப்படும் மூன்றாவது நீா் உந்து நிலையத்தில் உள்ள 25.70 லட்சம் லிட்டா் கொள்ளளவு தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டிக்கும் தாமிரவருணி தண்ணீா் சென்றடையும். சங்கரன்கோவிலில் இருந்து தனித்தனி மின் மோட்டாா்கள் மூலம் புளியங்குடி நகராட்சி மற்றம் திருவேங்கடம் பேரூராட்சிகளுக்கு தண்ணீா் பிரித்து அனுப்பப்படும். இக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் 78 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத் திட்டப் பணிகளை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை, ஊரக வளா்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம், திருநெல்வேலி சாா் ஆட்சியா் சிவ கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரியதா்ஷினி, திருநெல்வேலி வட்டாட்சியா் பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT