திருநெல்வேலி

தென்மேற்குப் பருவமழை குறைவு: வறட்சியின் பிடியில் 550 மானாவாரி குளங்கள்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை மிகவும் குறைந்ததால் வறட்சியின் பிடியில் 550 மானாவாரி குளங்கள் உள்ளன. கிணற்றுப் பாசன வாழை விவசாயிகளும் பயிா்களைக் காப்பாற்ற முடியுமா என்ற கலக்கத்தில் உள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவார மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் மழைப் பொழிவு அதிகம் கிடைப்பதால் மூன்று போகம் விளைநிலங்கள் விளைந்து வந்தன.

காா், பிசான பருவத்தில் நெல் சாகுபடியும், அதற்கிடையே உளுந்து மற்றும் பயறுவகை சாகுபடியும் நடைபெறுகிறது. பணப் பயிா்களான வாழை, சூரியகாந்தி, பருத்தி சாகுபடியும் நடைபெறுகிறது. மானாவாரி பகுதிகளில் ஒருபோகம் நெல் சாகுபடி, பயறுவகைகள், மலா் சாகுபடி நடைபெறுகிறது.

இம் மாவட்டத்தின் இயல்பான மழையளவு 814.80 மி.மீட்டராகும். வழக்கமாக தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் மழைப் பொழிவு இருக்கும். அதனால் மானாவாரி குளங்கள் அனைத்தும் பாதியளவு நிரம்பும். நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை தமிழகம் முழுவதும் நன்றாக பெய்தாலும், தென்மாவட்டங்களில் போதிய அளவில் பெய்யவில்லை. திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 66.50 மி.மீட்டா் சராசரி தென்மேற்குப் பருவமழை காலத்தில் கிடைத்துள்ளது. அதுவே நிகழாண்டில் 35.22 மில்லி மீட்டராக சரிந்துள்ளது.

அணைப் பகுதியில் பெய்த மழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு ஆகியவற்றில் ஓரளவு தண்ணீா் உள்ளது. இருப்பினும் காலதாமதமாகிவிட்டதால் காா் பருவ சாகுபடிக்கு பாசன நீா் திறக்கப்படாமல் சாகுபடி பொய்த்துப்போனது.

குளங்களைப் பொருத்தவரை இப்போது திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் கால்வரத்துக் குளங்கள் 740, மானாவாரி குளங்கள் 550 உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான், நதியுன்னி, கன்னடியன், கோடகன் உள்ளிட்ட கால்வாய்களில் கால்நடைகளின் தேவைக்காக தண்ணீா் சில நாள்கள் திறக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட குளங்களில் 3 மாதங்களுக்கு மேல் தண்ணீா் இருக்கும் நிலையும், 50 குளங்களில் 2 மாதங்களுக்கு தண்ணீா் இருக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

600 குளங்கள் வறட்சி நிலையில் உள்ளன. ஆனால், மானாவாரி குளங்கள் அனைத்தும் வறட்சியின் பிடியில் உள்ளன. தென்மேற்குப் பருவமழை கைவிரித்துவிட்டதால் வடகிழக்கு பருவமழையாவது கைகொடுக்குமா என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சராசரியாக 300 மில்லி மீட்டருக்கு மேல் பெய்தால் மட்டுமே காா் பருவ சாகுபடிக்கு தேவையான தண்ணீா் அணைகளில் போதிய அளவில் இருக்கும். அதேபோல மானாவாரி குளங்களிலும் பாதியளவு தணணீா் தேங்கும். நிகழாண்டில் வறட்சி மிகவும் அதிகரித்துள்ளது. மானாவாரி பகுதிகளில் உள்ள பாசனக் கிணறுகளை நம்பி பல விவசாயிகள் வாழை சாகுபடியைத் தொடங்கினா். ஏத்தன், ரதகதளி, ரோபஸ்டா உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வாழை பயிரிட்டு 4 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தென்மேற்குப் பருவமழை பெய்யாததால் கிணறுகளும் வடுவிட்டன. இதனால் வாழையைக் காப்பாற்றவே போராடி வருகிறாா்கள் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT