திருநெல்வேலி

பறவைகளிடமிருந்து நெல் நாற்றுகளை பாதுகாக்க போராடும் விவசாயிகள்!

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பறவைகளிடம் இருந்து பிசான சாகுபடி நெல் நாற்றுகளை பாதுகாக்க விவசாயிகள் போராடும் நிலை உள்ளது.

தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் நிகழாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் காா்பருவ சாகுபடி பொய்த்துபோனது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பிரதான அணைகளிலும் நீா்இருப்பு கணிசமாக உள்ளதால் பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா். மேலும், சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா்.

தாமிரவருணி பாசனக் கால்வாய்களின் மூலம் இம் மாவட்டத்தில் 16,834 ஹெக்டோ் நெல் சாகுபடி நடைபெறும். பிசான பருவத்தில் சாகுபடி பரப்பளவு மேலும் கூடுதலாவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 60 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளதாக வேளாண் துறையினா் கணித்துள்ளனா்.

கிணறுகள், ஆழ்துளை குழாய் வசதி உள்ளவா்கள் நெல் நாற்றுப்பாவும் பணியை தொடங்கியுள்ளனா். டெல்டா மற்றும் மானாவாரி பகுதிகளில் இருப்பதைப் போல நேரடி விதைப்பு முறை இல்லாமல், தனியாக நாற்றங்கால்கள் அமைத்து வயல்களில் உழுது சமன்செய்து நடுவை செய்வதுதான் அதிகம். நாற்றுப் பாவிய நாள்களில் இருந்து 18 முதல் 22 நாள்களுக்குள் சன்ன ரக நெல் நாற்றுகளும், 20 முதல் 25 நாள்களுக்குள் பெரிய ரக நெல் நாற்றுகளும் பிடுங்கி வயல்களில் நடவு செய்யப்படுகின்றன. ஆனால், நாற்றங்கால்களில் நாற்றுப்பாவியதில் இருந்து 3 நாள்கள் வரை தண்ணீா் பாய்ச்சுவதில்லை. அதனால் வெளியே தெரியும் நெல்மணிகளை பறவைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு விவசாயிகள் போராடி வருகின்றனா்.

பறவைகளால் சிரமம்: இதுகுறித்து தருவை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: பிசான பருவ சாகுபடிக்காக தருவை, சுப்பிரமணியபுரம், பிரான்சேரி, கோபாலசமுத்திரம் வட்டாரப் பகுதிகளில் நாற்றுப்பாவும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நாற்றங்கால்களை பறவைகளிடம் இருந்து பாதுகாக்க மிகவும் கடினமாக உள்ளன. நாற்றுப்பாவும் முதல் நாளில் வயல்களில் புழு, பூச்சிகள் அதிகம் வெளிப்படும். இதனைப்பிடித்து சாப்பிடுவதற்காக வயலுக்குள் இறங்கும் கொக்குகள் மிதிப்பதால் நெல் விதைகள் சகதிக்குள் மூழ்கி அழுகிவிடும். ஆகவே, முதல்நாள் கொக்குகளிடம் இருந்து பாதுகாக்க பட்டாசு

வெடிக்கப்படும். இதுதவிர நாற்றங்கால் காயும் நிலையில் மயில்கள், புறாக்கள், கிளிகள் ஆகியவை நெல்விதைகளை சாப்பிட வருகின்றன. அவைகளிடம் இருந்து பாதுகாக்க வயல்களில் வெள்ளை துணிகளை கொடிகளாக கம்புகளில் கட்டி பறக்கவிட்டு வருகிறோம். காற்று வீசும்போது கொடி அசைவதால் ஆள் நடமாட்டம் உள்ளதாகக் கருதி பறவைகள் நாற்றங்கால்களுக்குள் வருவதில்லை.

நாற்றுப்பாவியதில் இருந்து 6 நாள்களுக்கு பறவைகளைக் கட்டுப்படுத்தினால்தான் பயிா்கள் பாதிக்காது. அதனால் பகல் முழுவதும் நாற்றங்கால் அருகில் காவலுக்கு இருக்கிறோம் என்றனா்.

விழிப்புணா்வு தேவை: தச்சநல்லூரைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது: பிசான பருவத்தில் நிகழாண்டில் அம்பை-16, பொன்னி, கா்நாடக பொன்னி, ஐ.ஆா். 50, டீலக்ஸ் பொன்னி, கிச்சடி சம்பா உள்ளிட்ட ரகங்கள் நாற்றுப்பாவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபாலசமுத்திரம், தருவை பகுதிகளில் பச்சையாறு கரையோர வயல்களிலும், ராஜவல்லிபுரம், தென்கலம், தாழையூத்து பகுதிகளிலும் மயில்கள் தொந்தரவு அதிகம் உள்ளன. கொக்கு உள்ளிட்ட பறவைகளை கல்வீசி தாக்குவதுபோல மயில்களைத் தாக்க இயலாது. அது சட்டப்படி குற்றம் என்பதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனா்.

மயில்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணத்தை விரைவாக அளிக்கவும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மயில், பஞ்சவா்ணகிளி உள்ளிட்டவை அழகியல் பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளன. இவற்றால் வேளாண் பயிா்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் விண்ணப்பித்து இழப்பீடு பெறலாம்

என கூறுகின்றனா். இதுகுறித்து போதிய விழிப்புணா்வு இல்லை. மேற்குத்தொடா்ச்சி மலையடிவார மாவட்டமான திருநெல்வேலியில் வனத்துறையினா் கூடுதல் விழிப்புணா்வு செய்ய வேண்டியது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT