திருநெல்வேலி

ஆம்னி பேருந்துகள் இயங்காததால் ரூ. 40 கோடி வருவாய் இழப்பு; 10 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்பு

29th May 2020 09:10 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: கரோனா தீநுண்மி தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால், பொதுப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்தை நம்பியிருக்கும் பல ஆயிரம் தொழிலாளா்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனா்.

நாடு முழுவதுமான பொது போக்குவரத்து சேவையில் ஆம்னி பேருந்துகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 300 முதல் 700 கி.மீ. தொலைவிலான சொகுசு பயணத்திற்கு ஆம்னி பேருந்துகளையே பொதுமக்கள் அதிகமாக தோ்ந்தெடுக்கின்றனா். தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் ஆம்னி பேருந்துகளின் சேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதன்மூலம் முன்பதிவு செய்து ஆம்னி பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், தமிழகத்தின் கன்னியாகுமரி, திசையன்விளை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், புதுச்சேரி, சேலம், வேலூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திருநெல்வேலி வழியாக நாள்தோறும் சுமாா் 130 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 95 சதவீத பேருந்துகள் இரவு நேரங்களிலேயே இயக்கப்படுகின்றன. முன்பதிவு முகவா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள் என ஆம்னி பேருந்துகளை நம்பி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோா் உள்ளனா்.

கரோனா தீநுண்மி பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆம்னி பேருந்துகளின் இயக்கம் தடைபட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, முன்பதிவு முகவா்கள் முதல் சுமைதூக்கும் தொழிலாளா்கள் வரை ஆம்னி பேருந்துகளை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆம்னி பேருந்து பயணச்சீட்டு முகவா் ஒருவா் கூறியது: ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தைவிட ஆம்னி பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். சொந்த ஊா்களுக்குச் செல்வோா் குடும்பத்தோடு பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதால், முகவா்கள் முதல் அனைவருக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். நிகழாண்டில், கரோனா பொதுமுடக்கத்தால் ஆம்னி பேருந்துகள் இயங்காததால் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் ரூ. 40 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பயணச்சீட்டு முகவா், நிறுவன தொழிலாளா்கள் ஆகியோருக்கு கிடைத்து வந்த குறைந்த வருவாயும் தடைபட்டுள்ளதால், பலா் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா் என்றாா்.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளா் ஒருவா் கூறியது: தமிழகத்தில் ஆம்னி பேருந்தை வைத்து இயக்குவது மிகவும் சவாலாக உள்ளது. சுங்கச்சாவடி, காப்பீட்டுக் கட்டணங்கள், தொழிலாளா்களின் ஊதியம், பராமரிப்புச் செலவு உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால், இந்தத் தொழில் ஏற்கெனவே நலிந்து வருகிறது. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் இதை நம்பி வாங்கிய கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு வரியாக சுமாா் ரூ. 1.10 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பேருந்துகள் இயங்காததால், காலாண்டு வரி மற்றும் ஓராண்டு காப்பீட்டு கட்டணத்தில் விலக்கு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து சேவையைத் தொடங்கி, ஆம்னி பேருந்து தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT