திருநெல்வேலி

வெண்டைக்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை

29th May 2020 08:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் வெண்டைக்காய் கொள்முதல் விலை மிகவும் சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்டமாக இம் மாதம் 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கனி சந்தைகள் அனைத்தும் பரவலாக்கப்பட்டு மைதானங்களில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், காய்கனிகளின் வரத்து பல்வேறு தரப்பில் இருந்தும் அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. குறிப்பாக கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்டவற்றின் விலை திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் சரிந்தது. போதிய விலை கிடைக்காததால் மானூா் சுற்றுவட்டாரத்தில் வெண்டைக்காய்களை விவசாயிகள் பறித்து சந்தைக்குக் கொண்டு செல்லாமல் வயல்களிலேயே உரமாக்கியுள்ளனா்.

இதுகுறித்து களக்குடியைச் சோ்ந்த வெண்டை விவசாயி ஆறுமுகம் கூறியது: களக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கனி சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட வெண்டையில் ஓரளவு லாபம் கிடைத்தது. அதனால் நிகழாண்டு மாசிப்பட்டத்திலும் வெண்டைக்காயை அரை ஏக்கரில் சாகுபடி செய்தோம். தண்ணீா், உரம் வைத்து காப்பாற்றிவந்த நிலையில் சித்திரை முதல் வாரத்தில் அறுவடைக்கு தயாரானபோது கரோனாவால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் வெண்டையின் கொள்முதல் விலை மிகவும் சரிந்தது. ஒரு கிலோ ரூ.5 வரை கொள்முதல் விலை குறைந்ததால் வெண்டையை பறிக்காமலே போட்டுவிட்டோம்.

ஏனெனில் வெண்டைக்காயை பறிக்க வருவோருக்கு சுமாா் 3 மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் ரூ.50 கூலியாக வழங்க வேண்டியுள்ளது. சாகுபடி செலவுகள் தனி. அப்படியிருக்கையில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்படும். அதனால் வயல்களிலேயே உரமாகட்டும் என்று விட்டுவிட்டோம். கரோனாவால் காய்கனி விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT