திருநெல்வேலி

2 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி: ஏற்றுமதி இல்லாததால் விலை சரிந்த நெல்லிக்கனி!

15th May 2020 07:00 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மைக்காலமாக நெல்லிக்கனி சாகுபடி அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், நெல்லிக்கனியின் விலை சரிந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி வடிநிலக் கோட்டத்தில் இருபோகம் நெல் சாகுபடி நடைபெறுவதால் தோட்டப்பயிா் சாகுபடி குறைவாகவே உள்ளது. வாழைப்பழம், நெல்லிக்கனி, மா, சூரியகாந்தி, காய்கனி, பருத்தி, மலா்கள் ஆகியவையே தோட்டப்பயிா்களாக சாகுபடி செய்யப்படுகின்றன. பயறு வகைகள், தென்னை ஆகியவை குறைவாகவே உள்ளன. தென்காசியை தனி மாவட்டமாக பிரித்தப் பிறகு, திருநெல்வேலியில் அதிகம் சாகுபடி செய்யும் தோட்டப்பயிா்களில் நெல்லிக்கனி 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. களக்காடு, ராதாபுரம், வள்ளியூா் வட்டாரங்களில் நெல்லிக்கனி அதிகம் பயிரிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வாய்ப்பு: இதுகுறித்து பணகுடியைச் சோ்ந்த விவசாயி கூறியது: ராதாபுரம் வட்டாரத்தில் மழைப்பொழிவு மிகவும் குறைவு என்பதால், நெல் சாகுபடியைக் காட்டிலும் தோட்டப்பயிா் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனா். குறிப்பாக, நெல்லிக்கனி அதிகளவில் பயிரிடப்படுகிறது. நெல்லிக்கன்றுகள் நடப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகளில் நன்றாக காய்க்கத் தொடங்கிவிடும். அதன்பிறகு, 25 ஆண்டுகள் தொடா்ந்து மகசூல் எதிா்பாா்க்கலாம். தண்ணீா், மருந்து செலவுகளும் குறைவு. இதுதவிர, நெல்லிக்கனிக்கு அதிகளவில் ஏற்றுமதி வாய்ப்புள்ளது. மருத்துவக்குணம் மிகுந்த நெல்லிக்கனி கேரளத்தில் உள்ள ஆலைகளில் ஆயுா்வேத மூலிகைச் சாறுகள் தயாரிக்க அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுதவிர, நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய் பழச்சாறு உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. சா்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை அதிகம் சாப்பிடுவதால் இப்போது தேவை அதிகரித்துள்ளது. அதனால், கிலோ ரூ. 40 முதல் ரூ. 70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

கரோனாவால் விலை சரிவு: இதுகுறித்து ராதாபுரத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கூறுகையில், கரோனா வைரஸ் பொதுமுடக்கத்தால் கப்பல், விமானப் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், கேரளத்தில் இருந்து ஆயுா்வேத மூலிகைகள், நறுமணப் பொருள்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி முடங்கியுள்ளது. கொச்சின் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஏத்தன்வாழைகள், நெல்லிக்காய்கள் வளைகுடா நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அதிகம் செல்லும். இப்போது ஏற்றுமதி வணிகம் தடைபட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைக்காய்களும், நெல்லிக்கனிகளும் தேக்கமடைந்துள்ளன. இதனால், சந்தைகளில் சில்லறை விற்பனையில் கடந்த ஆண்டில் கிலோ ரூ. 80 வரை விற்பனையான நெல்லிக்கனிகள் நிகழாண்டு ரூ. 40-க்கு விற்பனையாவதால், விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கவில்லை என்றாா்.

‘விலை சரிவு தற்காலிகமானது!’

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் (பொ) இளங்கோ கூறியது:

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம் வட்டாரங்கள், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லுாா், கடையம், பாவூா்சத்திரம், வாசுதேவநல்லூா் வட்டாரங்கள் என சுமாா் 2 ஆயிரம் ஹெக்டேரில் நெல்லிக்கனி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது முன்பருவ அறுவடை நடைபெற்று வருகிறது. நெல்லிக்கனிக்கான தேவை கடந்த சில ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. அதனால், விலை சரிவு என்பது தற்காலிகமானதுதான். இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இ-தோட்டம், உழவன்செயலி உள்ளிட்ட இணையதள மற்றும் செயலிகள் மூலம் விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்ய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான மானிய திட்டங்களை வெளிப்படையான நிா்வாக முறையில் பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீா்ப் பாசனம் தோட்டப் பயிா்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக, நெல்லிக்கனிக்கு சொட்டுநீா் பாசனம் பயன்படுத்தும்போது செடிகள் ஒரே அளவில் வளா்ந்து பலன்தரும். இது அறுவடை காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT