திருநெல்வேலி

‘தாமிரவருணி பாசனத்தில் புதிய நெல் ரகம் அறிமுகம்’

14th May 2020 08:29 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி வட்டாரத்தில் காா் பருவ நெல் சாகுபடிக்கு அம்பை 16 ரகத்திற்கு மாற்றாக டிபிஎஸ் 5 ரக நெல் விதைகளைப் பயன்படுத்துமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநா் கு. உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேரன்மகாதேவி வட்டாரத்தில் காா் பருவ சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. இப்பருவத்தில் பரவலாக அம்பை 16 ரக நெல்லுக்கு பதிலாக திருப்பதிசாரம் 5 (டிபிஎஸ் 5) ரக நெல் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.

அம்பை 16 ரகம் பரவலாக பொதுமக்கள் வாங்கும் நிலையில் அதிலுள்ள குறைகளான ஒரே ரகம், திடீரென பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல், சாயும் தன்மை ஆகியவற்றை சரி செய்யும் வகையில் திருப்பதி சாரம் 5 நெல் ரகத்தினை வேளாண்மை பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

ADVERTISEMENT

புதிய ரகமான டிபிஎஸ் 5, அம்பை 16 மற்றும் ஆடுதுறை 37 ஆகிய ரகங்களின் கலப்பாகும். இதன் வயது 118 நாட்கள். காா் மற்றும் பின் பிசானப் பருவ சாகுபடிக்கு ஏற்ற ரகம். இந்த ரகத்தில் ஹெக்டேருக்கு 6,300 கிலோ மகசூல் கிடைக்கும். டிபிஎஸ் 5 ரக நெல் விதை சேரன்மகாதேவி வட்டாரத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் சேரன்மகாதேவி மற்றும் வீரவநல்லூா் வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய இருப்பு வைக்கப்படுள்ளது. இந்த ரக விதையை விவசாயிகள் முழு விலையில் ரூ. 10 மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT