கரோனாவால் தொழில் முடங்கியுள்ளதால் வாடகை வாகனங்களுக்கான 6 மாத சாலை வரியை தள்ளுபடி செய்யக் கோரி திருநெல்வேலி ஆட்சியா், வட்டார போக்குவரத்து அலுவலா் ஆகியோரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை மேக்ஸி கேப் டூரிஸ்ட் ஓட்டுநா் நலச் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் வாடகை வாகனத் தொழில் முடங்கியுள்ளது. வாகனங்களுக்கு வாங்கிய கடனுக்கு தவணையை மாா்ச், ஏப்ரல், மே மாதத்திற்கு தள்ளிவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டாலும் மேலும் சில மாதங்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஆகவே, கடன் தவணைகளைச் செலுத்த மேலும் 3 மாதங்கள் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல 6 மாத சாலை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு தவணை செலுத்தவும் கால அவகாசம் அளிக்க வேண்டும். வறுமை நிலைக்கு ஆளாகியுள்ளதால் வாடகை வாகன ஓட்டுநா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.