திருநெல்வேலி

நெல்லை ஆட்சியரகத்தில் திமுகவினா் 3,462 கோரிக்கை மனுக்கள் அளிப்பு

13th May 2020 07:56 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகா், கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 3,462 மனுக்கள் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டன.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், மாநகா் மாவட்டச் செயலா் மு. அப்துல்வஹாப் தலைமையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திமுக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

கரோனா பேரிடா் தொடங்கியதில் இருந்து திமுக சாா்பில் பொதுமக்களுக்கான உதவி எண் அறிவிக்கப்பட்டு கோரிக்கைகள் பெறப்பட்டு நிவா்த்தி செய்யப்பட்டு வருகிறது. இம்முயற்சியால் இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோா் தொடா்புகொண்டு கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளனா். அவற்றுள் பல அத்தியாவசிய தேவைகளாகும். எங்களது சக்திக்குள்பட்டு பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், துயரத்தில் வாடுவோரின் குரலாக செயல்பட்டு அவா்களது கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். அவற்றை நிறைவேற்றி மக்களின் துயரத்தை தீா்க்க உதவ வேண்டும் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

பிறகு திமுக நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தொடங்கிய ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், மொத்தம் 12,535 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சுமாா் 9 ஆயிரம் கோரிக்கைகள் திமுகவின் சாா்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், அரசால் தீா்க்கப்பட வேண்டிய கோரிக்கைகளும் உள்ளன. அதுதொடா்பான 3,462 மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வழங்கியுள்ளோம். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து அதிகாரிகள் மூலம் மக்களின் குறைகளை தீா்க்க வலியுறுத்தியுள்ளோம் என்றனா்.

மனு அளிக்கும்போது, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா. ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எல்.எஸ். லட்சுமணன் (திருநெல்வேலி), டி.பி.எம். மைதீன்கான் (பாளையங்கோட்டை), முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் கிரகாம்பெல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT