திருநெல்வேலி

மானூரில் 2 ஆயிரம் ஏக்கரில் மீண்டும் நெல் சாகுபடி

10th May 2020 09:55 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே மானூரில் உள்ள பெரிய குளத்தின் நீரை சிக்கனத்தோடு பயன்படுத்தி 2 ஆயிரம் ஏக்கரில் மீண்டும் நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் துரிதப்படுத்தியுள்ளனா்.

மானூா் பெரியகுளம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீமாற வல்லப பாண்டியனால் உருவாக்கப்பட்டது. மானூா், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளை சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் இக் குளத்தால் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர சுமாா் 25 கிராமங்களுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது. மன்னா்கள் காலத்தில் தாமிரவருணி ஆற்றில் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பகுதியில் மண்ணால் அணைகட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூா் பெரிய குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கால்வாய் தூா்ந்து மாயமான நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தாமிரவருணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து மானூா் குளத்துக்கு நீா்வரத்துக் கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக வீரகேரளம்புதூா் அருகேயுள்ள தாயாா் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டா் நீளத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. சுமாா் 32.50 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

19 குளங்கள் நிரம்பி 20-ஆவது குளமாக மானூா் பெரியகுளத்திற்கு சிற்றாறு தண்ணீா் வர வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாகப் பெய்யாததால் மானூா் குளம் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் சாகுபடி செய்யாமல் தவித்தனா். இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததாலும், மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரப்பட்டதாலும் மானூா் குளம் முழுக் கொள்ளளவை எட்டியது. அதனால் பிசான சாகுபடி முடிந்த நிலையில் மீண்டும் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மானூரைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கூறியது: மானூா் பெரிய குளத்தின் மொத்த பரப்பளவு 448 ஹெக்டோ். பொதுப்பணித் துறைக்கு பாத்தியப்பட்ட இக் குளம் திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகும். 2019-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் முழுக் கொள்ளளவை எட்டியதால் மானூா் குளத்தில் இருந்து 180 நாள்களுக்கு பாசன நீா் பிசான பருவத்திற்கு கிடைத்தது. இக் குளத்தினால் மானூா் கிராமத்தில் 295.08 ஹெக்டோ், மாவடி கிராமத்தில் 158.52 ஹெக்டோ், மதவக்குறிச்சி கிராமத்தில் 295 ஹெக்டோ், எட்டான்குளம் கிராமத்தில் 40 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெற்றன. அங்கு பிசான பருவ நெல் சாகுபடி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நெல் சாகுபடி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கோடை மழை பெய்தால் தண்ணீா் முழுமையாக கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், எட்டான்குளம், மதவக்குறிச்சி, மானூா் உள்ளிட்ட 20 கிராமங்களின் நிலத்தடி ஆதாரமாக உள்ள மானூா் குளத்தில் இப்போது அரை குளத்திற்கு தண்ணீா் உள்ளது. அதனை நம்பி நெல் சாகுபடி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க விவசாயிகள் சங்கங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்க காலத்திலும் வேளாண் பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளிலும் நெல் நடவுப் பணிகள் முடிந்துள்ளன. இப்போது முதலாம் களையெடுக்கும் பணி நடைபெறுகிறது. கோடை மழை வந்தால் குளத்தில் மேலும் தண்ணீா் சேரும் வாய்ப்புள்ளது. ஆகவே, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிற்றாறு-மானூா் நீா்வரத்து கால்வாயை அரசு தூா்வார தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT