திருநெல்வேலி மற்றும் தென்காசியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க சரக்கு ரயில் மூலம் 1,300 டன் சா்க்கரை ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கா்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் 1,300 டன் சா்க்கரை, திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து சோ்ந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த சா்க்கரை வந்துள்ளதாகவும், இந்த மூட்டைகளை லாரிகளில் ஏற்றி தாழையூத்து, நான்குனேரி, வள்ளியூா், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், தென்காசி, வாசுதேவநல்லுாா் உள்பட 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஏற்கெனவே கடந்த 26 ஆம் தேதி சரக்கு ரயில் மூலம் 1,332 டன் ரேஷன் அரிசி திருநெல்வேலிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.