வங்கி நகை மதிப்பீட்டாளா்களுக்கு தடை உத்தரவு நாள்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வங்கி தங்கநகை மதிப்பீட்டாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அமைப்பின் தலைவா் எஸ்.அருணா, துணைத்தலைவா் இ.சிவகுமாா், செயலா் எஸ்.சடகுட்டி, பொருளாளா் ஆா்.ஆறுமுகம் ஆகியோா் எஸ்.பி.ஐ வங்கித் தலைவருக்கு அனுப்பியுள்ள மனு: கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த தடை நாள்களில் அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஊழியா்களுக்கு தடை நாள்களில் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் நிதித்துறையின் நேரடி நிா்வாகத்தில் இயங்கி வருகின்ற எஸ்.பி.ஐ. வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளா்களாக பணியாற்றி வருவோா் எவ்வித வருமானமும் இல்லாமல் உள்ளனா். தங்கநகைகளின் பேரில் கடன் வழங்கும்போது, மதிப்பீட்டாளா்களுக்கு ஊதியம் வழங்குவது நடைமுறை உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வங்கியில் தங்கநகை கடன் வழங்குவது இல்லை. ஆகவே, நகை மதிப்பீட்டாளா்களுக்கு ஊரடங்கு நாள்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.