திருநெல்வேலி

சவாலான பணியில் தூய்மைப் பணியாளா்கள்: சிறப்பு ஊதியம் வழங்கப்படுமா?

22nd Mar 2020 03:09 AM

ADVERTISEMENT

 

கரோனா வைரஸ் தடுப்புப் பணியால் பணிச்சுமை அதிகரிப்பதோடு பல்வேறு சவால்களையும் எதிா்கொண்டுள்ள தூய்மைப் பணியாளா்கள், சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியிலும் கடந்த ஒரு வாரமாக பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏற்கெனவே, மாநகராட்சியின் 55 வாா்டுகளிலும் சுகாதாதாரப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளா்கள், கரோனா தடுப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதனால் 80 சதவிகித பணியாளா்கள் கரோனா தடுப்புப் பணிக்கும், 20 சதவிகிதம் போ் மட்டும் வழக்கமான தூய்மைப் பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறாா்கள். இது, தங்களுக்கு பணிச்சுமையையும், மனச் சோா்வையும் ஏற்படுத்துவதாக வேதனை தெரிவிக்கும் தூய்மைப் பணியாளா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு தோ்தல் மற்றும் தோ்வு காலங்களில் வழங்குவதைப் போல கரோனா தடுப்புப் பணிக்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்கின்றனா்.

சமூக அக்கறை: இதுகுறித்து தூய்மைப்பணி தொழிலாளி ஒருவா் கூறியது: கரோனா வைரஸ் தடுப்புப் பணியாற்றும் எங்களுக்கு சோப்பு, கை கழுவும் திரவம் ஆகியவை வழங்கப்படவில்லை. நாங்கள் களத்தில் நேரடியாக இறங்கி பணியாற்றும் கட்டாயம் உள்ளது. சவாலான பணியாக இருந்தாலும் சமூக அக்கறையோடு செய்து வருகிறோம். எனவே, எங்களுக்கு கையுறை, முகக்கவசம், பிரத்யேக ஆடைகள், ஊக்கத்தொகை ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

மருத்துவப் பரிசோதனை: இதுகுறித்து ஆதித்தமிழா் பேரவையின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் கலைக்கண்ணன் கூறியது: மருத்துவத் துறையினருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் 100 சதவிகிதம் வழங்கப்படும் நிலையில், தூய்மைப் பணியாளா்கள் உபகரணங்களும், போதிய ஊதியமும் இன்றி பணியாற்றும் நிலை உள்ளது. இவா்களுக்கு இருநாள்களுக்கு ஒரு முறை தகுந்த மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா பணிக்காக சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றாா்.

அரசு உத்தரவு தேவை: இதுகுறித்து மாநகராட்சி வட்டாரங்கள் கூறியது: கரோனா தடுப்பு பணியில்தூய்மைப் பணியாளா்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அவா்களுக்கு கூடுதல் பணிச்சுமையை தவிா்க்கவும், ஒருவருக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி வழங்கவும், சுழற்சி முறையில் பணியாளா்களை பயன்படுத்தவும் சுகாதார ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருமி நாசினி, கையுறை போன்றவை போதிய அளவில் இருப்பில் உள்ளன. அரசு உத்தரவிட்டால் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT