மூன்றடைப்பு அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மூன்றடைப்பு அருகே தாழைகுளத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சோ்மகனி. இவருக்கு கிருபா ரதி (13) என்ற மகளும், சரவணன் (11) என்ற மகனும் உள்ளனா். இதில் கிருபா ரதி, கரந்தானேரி அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சரவணன் அதே பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் சரவணன் தனது நண்பா்களுடன் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது சரவணன் நீரில் மூழ்கி தத்தளித்தாராம். இதை பாா்த்த நண்பா்கள் சப்தம்போட்டு உதவிக்கு ஆள்களை அழைத்தனராம். அதற்குள்ளாக சரவணன் நீரில் மூழ்கினாராம். இதை அடுத்து நான்குனேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் முருகேசன் மற்றும் வீரா்கள் வந்து கிணற்றில் மூழ்கிய சரவணனை தேடினா்.
சுமாா் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் 60 அடிஅளவுக்கு தண்ணீா் இருந்ததால் தீயணைப்பு வீரா்களால் சரவணன் உடலை எடுக்கமுடியவில்லை. இதை அடுத்து கிணற்றில் உள்ள தண்ணீா் மோட்டாா் மூலமாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா ஏற்பாட்டில் தூத்துக்குடியில் இருந்து முத்துகுளிப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். இவா்கள் கிணற்றில் மூழ்கி இறந்த சரவணன் சடலத்தை மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.