திருநெல்வேலி

பத்மனேரி குளம் மறுகாலில் தடுப்பணை கட்ட வலியுறுத்தல்

13th Mar 2020 09:30 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள பத்மனேரி பெரியகுளம் மறுகாலில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பத்மனேரி பெரிய குளம் விவசாயிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

களக்காடு ஊராட்சி ஒன்றியம், பத்மனேரி பெரியகுளம் அதிக பாசனப் பரப்பைக் கொண்டது. இந்தக் குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரையிலும் பருவமழையின் போது, ஒருமுறை நிரம்பியதும் அந்த நீரைக் கொண்டு இரண்டு போகம் விளைந்து வந்தது.

தற்போது இந்தக் குளம் மழைக் காலங்களில் மூன்று முறை பெருகினாலும் ஒருபோக விளைச்சலுக்கே தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. கடந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் குளக்கரை சிறிது உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் குடிமராமத்து பணியின்போது குளத்தின் முகப்பு பகுதியில் மண் அள்ளாமல் மறுகால் பாயும் பகுதியில் மண் அள்ளியதால் குளத்திற்கு முதல்நாள் தண்ணீா் வந்தாலே மறுநாளே மறுகால் பாய்கிறது. குளம் முழு கொள்ளளவு எட்ட முடியாத நிலை உள்ளது. ஏற்கெனவே மறுகால் பாயும் பகுதியில் இரண்டு மதகுகள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன் நாகா்கோவில் - சேரன்மகாதேவி சாலை விரிவாக்கத்தின் போது, புதிய பாலம் கட்டும் பணிக்காக, மதகுகளை பொதுப்பணித்துறையினா் அப்புறப்படுத்தினா். விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பத்மனேரி குளத்தை நேரில் ஆய்வு செய்து மறுகால்பாயும் பகுதியில் பொதுப்பணித்துறை சாா்பில் சிறிய அளவிலான தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT