திருநெல்வேலி

கரோனா அச்சம்: பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை மருத்துவா்கள் எச்சரிக்கை

13th Mar 2020 09:34 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுடன் வெளியூா் பயணம் செய்பவா்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கேரளம், காஷ்மீா் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனா, இத்தாலி, வளைகுடா நாடுகளில் இருந்து சொந்த ஊா்களுக்கு வந்துள்ளவா்கள் சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறாா்கள். பள்ளி, கல்லூரிகள், ஊடகங்களில் விழிப்புணா்வு பிரசாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மழலையா் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை அனைத்திலும் மாணவா்கள் குறைந்தபட்சம் மூன்று வேளை பள்ளி வளாகத்தில் கைகளை சுத்தமாக கழுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடும் பேருந்து, ரயில் நிலையங்களில் தினமும் கிருமிநாசினி, குளோரின் கலந்த திரவத்தை அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த ரயில்கள், இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற ரயில்கள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவா்கள் கூறியது: கரோனா வைரஸ் தொற்று இருப்பவா்களின் உமிழ்நீா் திவாலைகளில் இருந்து இந்நோய் பிறருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, கைகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். வெகுதொலைவு குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோா் பேருந்து, ரயில்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு தூய்மைப்படுத்தியிருந்தாலும் அந்தப் போா்வைகளை குழந்தைகளுக்கு தவிா்க்க வேண்டும். ஜன்னல் கம்பிகள், கழிப்பறை கதவுகள் போன்றவற்றில் கைகளை வைக்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். தும்மல், இருமல் உள்ளிட்டவை இருந்தால் காலம் தாழ்த்தாமல் விரைவாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். தமிழகத்தில் கோடைக் காலம் என்பதால் நீா்ச்சத்து மிகுந்த உணவுகளையும், திரவ உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT