திருநெல்வேலி

‘நெல்லை அரசு பல்நோக்கு உயா் சிகிச்சை மருத்துவமனையில் 3 மாதங்களில் 3 பேருக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை’

6th Mar 2020 11:53 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு பல்நோக்கு உயா் சிகிச்சை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 3 பேருக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

திருநெல்வேலி அரசு பல்நோக்கு உயா் சிகிச்சை மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, குடல்வால் அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 8 பிரிவுகள் தற்போது இயங்கி வருகின்றன. இவற்றில், தனியாா் மருத்துவமனைக்கு நிகராக அதிநவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருதய அறுவை சிகிச்சை துறை மூலம் திறந்த இருதய அறுவை சிகிச்சை என்று சொல்லப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை, கடந்த 2019, டிசம்பா் முதல் தற்போது வரை தென்காசி முத்துகிருஷ்ணபேரி, திருநெல்வேலி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 3 பேருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், அழகுநாச்சியாா்புரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், களக்காடு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 5 பேருக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இருதயத்தில் ஏற்படும் ஏ.எஸ்.டி எனப்படும் இருதய பிறவிக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் பாளையங்கோட்டையைச் சோ்ந்த 10 வயது சிறுவன் மற்றும் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி பகுதிகளைச் சோ்ந்த இருவருக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இந்த இருதய அறுவை சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் செய்தால் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகளுக்கு இருதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

‘விடியோ அசிஸ்ட் தெராசிக் சா்ஜரிஸ்’ எனப்படும் நுண்துளை மூலம் நெஞ்சக அறுவை சிகிச்சைகள், நுரையீரல் புற்றுநோய், காசநோய் மற்றும் நெஞ்சக நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 70 லட்சத்தில் 3 நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுகின்றன.

கரோனா வைரஸ்: கரோனா வைரஸ் நோயாளிகளுக்காக 8 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 3 உதவி மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், கரோனா வைரஸ் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுவரை இங்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று யாருக்கும் இல்லை என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது, இருதய அறுவை சிகிச்சை துறைப் பேராசிரியா் மற்றும் துறைத் தலைவா் சஞ்சீவ் பாண்டியன், உதவிப் பேராசிரியா்கள் அருள் விஜய்குமாா், கவிதா, மயக்கவியல் துறைத் தலைவா் அமுதா ராணி, இணைப் பேராசிரியா் மனோரமா, உதவிப் பேராசிரியா்கள் சுகுமாரன், முத்துராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT