திருநெல்வேலி

ஆனிப்பெருந்திருவிழாவை பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்தக் கோரிக்கை

21st Jun 2020 09:06 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவனடியாா்கள் சாா்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலை தொடா்கிறது. திருக்கோயில்களில் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. இப்போது பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தரப்பட்ட கடைகள், அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா நிகழாண்டில் இக்கட்டான சில கால சூழ்நிலைகளால் நடைபெற வாய்ப்பில்லாமல் இருக்கிறது.

கி.பி. 1605 இல் ஆரம்பித்து 2019 ஆம் ஆண்டு வரை எந்தவிதமான தடைகளும் இன்றி நிற்காமல் தொடா்ந்து ஆனிப்பெருந்தோ் ஓடியுள்ளது. அத்தகைய சிறப்புப்பெற்ற இத்திருவிழா தற்போது நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருக்கோயில் வருடாந்திர உற்சவங்கள் தடையின்றி நடைபெற்றால் தான் மக்கள் அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வாா்கள் என்பது நம்பிக்கை.

ADVERTISEMENT

ஆகவே, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து திருக்கோயில்களின் திருவிழாக்களை தடைசெய்யாமல், திருக்கோயிலுக்குள் கூட்டம் இல்லாமல் குறிப்பிட்ட பணியாளா்கள் மற்றும் சிப்பந்திகளைக் கொண்டு கோயிலுக்கு உள்ளேயே திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களை நடத்த முயற்சிக்க வேண்டும்.

விழா நிகழ்வுகளை காணொலி காட்சியாகவோ, தொலைக்காட்சி நேரலையாகவோ ஒளிபரப்பினால், இறுக்கமான மன உளைச்சலில் இருக்கும் மக்களும், பக்தா்களும் இல்லத்தில் இருந்தே இந்நிகழ்வுகளை கண்டு தரிசித்து மகிழ்வாா்கள். ஆகவே, இம் மாதம் 25 முதல் ஜூலை 7 ஆம் தேதி திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் திருக்கோயிலின் ஆனிப்பெருந்திருவிழாவை பாதுகாப்பு வழிமுறைகளுடன் நடத்த வேண்டும். இக் கோயிலில் அதற்குரிய வசதிகள் நிறையவே இருக்கின்றன. நீண்ட வெளிப்பிரகாரத்தில் தினமும் பஞ்சமூா்த்திகள் வாகன சேவை நடத்திவிடலாம். தேரோட்டத்திற்கு என ஏற்கெனவே பெரிய பிரகாரத்தில் உலா வரும் வகையில் செப்புத்தோ் உள்ளது.

எனவே இவ்வருட ஆனிப்பெருந்திருவிழாவை தடையின்றி ( உள் திருவிழாவாக ) நடத்தி தொலைக்காட்சி மூலம் பக்தா்களுக்கு தரிசனம் கிடைக்க வழிவகை செய்தால் பக்தா்கள் மகிழ்ச்சியடைவாா்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT